ஈழத்துப்புலவர் கல்லடி வேலுப்பிள்ளை

Kalladi_Veluppillaiஇன்று ஈழத்தின் மறக்க முடியாத புலவரான ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின் 156 ஆவது பிறந்தநாள் நினைவு தினமாகும். இவ் ஆக்கத்தை படித்து முடிக்கும் போது இப்புலவரை நாம் ஏன் நினைவு கூறவேண்டும் என்பதை அறிந்துகொள்ளமுடியும்.

நேரப்பற்றாக்குறையானவர்கள் அவரின் சுவார்ஷ்யமான “கண்டன” கதைகளை மட்டும் வாசித்துக்கொள்ளலாம். :)

பிறப்பு :
1860 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 7 ஆம் திகதி இலங்கையில் யாழ் பகுதியைச்சேர்ந்த‌ வசாவிளான் எனும் ஊரில் பிறந்தார்

பெயர் :
“கல்லடி” வேலுப்பிள்ளை என அடைமொழியுடன் அழைக்கப்படும் இப்புலவருக்கு அப் பெயர் வந்தமைக்கான காரணம்;
இப் புலவரின் வீட்டின் அருகில் ஒரு பெரிய கருங்கல் இருந்துள்ளது. அதில் இருக்கும் ஆசனம் போன்ற அமைப்பில் இருந்தே இப்புலவர் கவி, பாடல்கள் மற்றும் நூல்களை எழுதுவது வழமை; அக்கல்லின் அருகில் இருந்து எழுதுவதால் இவரை கல்லடி வேலுப்பிள்ளை என ஊரார் அழைத்தார்கள். (வசாவிளானில் இவர் வசித்து வந்த பகுதியில் இன்னொரு நபரும் வேலுப்பிள்ளை என்ற பெயருடன் இருந்துள்ளார். ஆள் குழப்பத்தை போக்க இந்த “கல்லடி” என்ற சொல் முக்கியமாக திகழ்ந்தது.)

குடும்பம் :
கல்லடி வேலுப்பிள்ளை உரும்பிராயைச்சேர்ந்த ஆச்சிக்குட்டி எனும் பெண்ணை திருமணம் புரிந்தார். அவர்களுக்கு சுப்பிரமணியம் (கல்லடி மணியம்) , நடராசா என்றைழைக்கப்பட்ட இரு பிள்ளைகள் பிறந்தனர். சில வருடங்களில் ஆச்சிகுட்டி காலமாக அவரின் தங்கையான ஆச்சி முத்தை மணந்துகொண்டார். அவர்களுக்கும் சாரங்கபாணி மற்றும் இரத்தினசபாபதி (நயினார்) எனும் இரு மகன்கள் பிறந்தார்கள்.

ஆரம்ப கல்வி :
அகஸ்டீன் என்ற கிறித்தவரிடம் தொடக்கக் கல்வி பயின்ற கல்லடிவேலுப்பிள்ளை, பின்னர் பெரும்புலவர் நமசிவாயம், வித்துவான் கதிர்காம ஐயர் ஆகிய தமிழ்ச் சான்றோர்களிடம் தமிழ் மொழியை முறையாகக் கற்றுப் புலமை பெற்றார். வடமொழியார்வத்தால் அதையும் கற்றுத்தேரிந்துகொண்டார்.

சிறப்புக்கள் :

கண்டன பத்திரிகை
சிறு வயது முதலே கவி, பாடல்கள், ஆராய்வுகட்டுரைகள் என பல எழுத்துவடிவங்களை எழுதிவருவதில் ஆர்வம் கொண்ட அவருக்கு சொந்தமாக ஒரு பத்திரிகையை வெளியிடவேண்டும் என்ற ஆர்வம் நீண்டகாலமாக இருந்துவந்தது.
அவரது நாற்பது வயதிற்கு பின்னரே அதற்கான தருணம் வாய்த்தது. நண்பர்களின் உதவியுடன் சென்னை சென்று அங்கிருந்து ஒரு அச்சியந்திரத்தை வாங்கி யாழ்ப்பாணம் கொண்டுவந்தார். சொந்தமாக அச்சியந்திரம் இருந்தால் மட்டுமே யாருடைய இடையூறும் இன்றி கருத்துக்களை சொல்லமுடியும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

சொந்த அச்சியந்திரத்தின் உதவியுடன் “சுதேச நாட்டியம்” என்ற பத்திரிகையை 1902 ஆம் ஆண்டு வெளியிட்டார்.
இப்பத்திரிகைக்கு சுதேச நாட்டியம் என பெயர் வைத்தமைக்கும் ஒரு காரணமுண்டு; ஆரம்ப காலத்தில் சொந்த பத்திரிகை வெளியிடும் ஆவலை பலரிடம் பகிர்ந்த போது அவர்கள், அப்போது பிரபலமாக இருந்த “native opinion” எனும் பத்திரிகையில் வேலை பார்க்கலாமே / அவர்களுடன் நட்புறவாடலாமே என பலவிதமான கருத்துக்களை தெரிவித்திருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு பதில் கொடுக்கும் வகையிலேயே இப் பெயர் சூட்டப்பட்டது.

“எப் பிரபுக்களாயினும், எவ்வதிகாரிகளாயினும், எக்குருவாயினும், எந் நண்பராயினும், எக் கலாஞானிகளாயினும், நீதியற்ற கிரியைகளைச் செய்கிறவராய்க் காணப்படுவாராயின், அக்கிரியையும், அவர் கீழ் நிலையையும், எடுத்து வெளிப்படுத்த எதற்காயேனும் அஞ்சி, பின்நிற்கப் போகிறதில்லை. இதுவே நடுநிலையும் பொது நன்மையும் விரும்பும் பத்திரிகா லட்சணமாம்.” என்ற தனது கோட்பாட்டுடன் வெளியான சுதேச நாட்டியம் பத்திரிகையை சுமார் 32 வருடங்கள் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.

அக்கால கட்டத்தில் ஈழத்தில் இடம்பெற்ற அரச / சமூக தவறுகளை சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவிப்பதில் இப்பத்திரிகை முதன்மை பெற்றிருந்தது. இவரின் பத்திரிகையில் வெளியான அரச கண்டனங்களால் 1910 ஆம் ஆண்டு சிறை செல்ல நேரிட்டது.

யாழ் வரலாறு / யாழ்ப்பாண வைபவ கெளமுதி
ஈழத்தில் உள்ள ஒவ்வொரு ஊரின் பெயருக்கான காரணத்தையும் அவ் அவ் ஊராரின் வாழ்வியலையும் எடுத்துக்காட்டும் ஒரே நூலாக இன்றுவரை திகழ்வது இவர் எழுதிய யாழ்ப்பாண வைபவ கெளமுதி எனும் நூலாகும். 1918 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இவ் நூல் பல்வேறு சரித்திர ஆய்வுகளின் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டு வெளியான நூலாகும். இதன் இரண்டாம் பதிப்பு புலம் பெயர் ஈழத்தவர் ஒருவரால் 2002 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. ஈழ வரலாற்றை அறிய நினைப்பவர்கள் பூரண அறிவை பெற்றுக்கொள்ள இவ் நூலை படிப்பது அவசியமாகிறது.

இவற்றைத்தவிரவும் பல கவி, பாடல்கள் மற்றும் 20 நூல்களை இப்புலவர் எழுதியுள்ளார். அவர் எழுதிய நூல்கள் கண்டன நூல்களாகவும், சரித்திர நூல்களாகவும் அமைந்திருந்தது. கால ஓட்டத்தினாலும் யுத்த காரணங்களினாலும் அவற்றில் பல அழிவுற்ற நிலையில் ;
கதிர மலைப் பேரின்பக் காதல்
மேலைத் தேய மதுபான வேடிக்கைக் கும்மி
உரும்பிராய் கருணாகர விநாயகர் தோத்திரப் பாமாலை
ஆகியன இன்றுவரை பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது. இவற்றைத்தவிர சில சிறு கட்டுரைகள், பாடல்களையும் காணமுடிகிறது.

” ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை ” என்ற சொல்லை இன்றைய இளம் சமூகத்தவர்கள் நினைவில் வைத்துக்கொள்ளும் அளவிற்க்கு பிரபலமானவை அவரது கண்டனங்களும் அதை அவர் வெளிப்படுத்திய முறைகளுமாகும். அவற்றை இனி பார்க்கலாம்.

சுவார்ஷ்ய கண்டனங்கள்  சம்பவங்கள் :

சம்பவம் 1 :

சிங்கப்பூரில் தர்மலிங்கம் என்று ஒரு செட்டியார் இருந்தார். இவர் ஒரு தவில் வித்துவானும் கூட. ஆனால் அவர் ஒரு கருமி (பணம் செலவிட மாட்டார், வாங்கிய பணத்தை கொடுக்கவும் மாட்டார்).

கல்லடி வேலுப்பிள்ளை நடாத்திய சுதேச நாட்டியம் பத்திரிகையை சிங்கப்பூரிலுள்ள அனேக தமிழர்கள் மாதச் சந்தா, வருடச் சந்தா எனப் பணங் கட்டி வரவழைத்துப் படித்தார்கள். இவர்களில் தர்மலிங்கம் செட்டியாரும் ஒருவர். செட்டியார் ஒருவருச காலமாகச் சந்தாவை அனுப்பவில்லை. வந்த இடத்தில் அவரிடம் பேசலாம், பணத்தையும் பெற்றுக் கொள்ளலாம் என யோசித்த கல்லடி வேலுப்பிள்ளை தவில் வித்துவான் வீட்டுக்குப் போனார்.

ஆனால், அவ் தவில் வித்துவான் தனது சேவகரிடம் தான் எழுதிய ஒரு அட்டையைக்கொடுத்து, வருபவர்களிடம் அதைக்காட்டி அனுப்பி வைக்கும் படி கூறியிருந்தார்.
கல்லடி வேலுப்பிள்ளை வந்திருந்தபோது வித்துவான் இல்லாததால், சேவகர் அவ் அட்டையை அவரிடம் காட்டினார்.
அதில் “காசு தண்டலுக்காக யாழ்ப்பானத்தில் இருந்து வருபவரானாலும் சரி, வந்து உள்ளூரில் வசிப்பவரானாலும் சரி, நம் கிரகத்தினுள் பிரவேஷிக்க கூடாது” என்றும் அதன் கீழே, “தண்ட வருவோரைக் கண்டிக்க தளரா மனம் அருள்வாய் பராபரமே” எனும் வாசகமும் எழுதப்பட்டிருந்தது.

இதைக்கண்டு ஆத்திரமடைந்த கல்லடிவேலுப்பிள்ளை, அவ் அட்டையின் பின்னால்,
“தட்டியுண்ணும் செட்டியிடம்
தண்டுபவர் இங்கிருந்தால்
மட்டி அவர் என்றல்லோ
மதிப்பேன் பராபரமே”
என எழுதிக்கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

வீட்டிற்கு வந்து இதை வாசித்த வித்துவான் கொதித்து, கல்லவி வேலுப்பிள்ளை மீது மான நட்ட வழக்குப்போட்டார்.

நீதவான் கல்லடி வேலுப்பிள்ளை அவ்வாறு எழுதியதற்கான விளக்கத்தை கேட்ட போது,
சிறு புன்னகையுடம் ” நீதிபதி அவர்களே ! நான் திரு. தர்மலிங்கத்தை இகழ்ந்தோ, கேலியாகவோ எதையும் எழுதவில்லை. ” தட்டி உண்ணும் செட்டி” எனக் குறிப்பிட்டது தவிலைத் தட்டி அதனால் வரும் வருமானத்தில் உண்பது. செட்டியார் தவில் தட்டித்தானே உழைக்கிறார். அத்துடன் “தண்ட வருவோரைத் தண்டிப்பேன்” எனவும் அறிவித்தலில் எழுதியிருந்தார். என் பத்திரிகையின் ஒரு வருஷப் பணம் என்னும் செட்டியாரிடம் பாக்கியுள்ளது. இவரிடம் யாரும் தண்டப்போவார்களா? அப்படிப் போவோரை மட்டிகள் என்றே மதிப்பிட்டேன், இதில் என்ன தவறு? ஏதோ நான் தகாததை எழுதிவிட்டேன் என்று என் மேல் கோபிக்கவோ, நீதிமன்றம் வரை என்னை இழுத்தடித்து தேவையற்ற சிரமம் தரவோ எக்காரணமும் இல்லையே ” என்று மிகவும் வினயமாகக் கூறினார்.

கூடியிருந்த மக்களின் ஆரவாரமும் சிரிப்பொலியும் அடங்கியபின் திரு. வேலுப்பிள்ளையின் விளக்கத்தைப் பரிசீலனை செய்தபின் அவர் வாதம் சரியெனவும் , அவரின் பத்திரிகைப் பணத்தையும் திரு.தர்மலிங்கம் கொடுக்கவேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். தர்மலிங்கம் வெட்கித் தலை குனிந்தார்.

சம்பவம் 2 :

ஒரு கலை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது, அங்கு விளம்பர பலகையில் “கதிரை 2 ரூபா” எனப்போடப்பட்டிருந்தது.
இவர் அதைக்காட்டி இது தவறு “கதிரைக்கு 2 ரூபா” என்றுதான் வரவேண்டும், அவ்வாறு போடுங்கள் என்று சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. இவரும் 2 ரூபா கொடுத்து டிக்கட் எடுத்துவிட்டு, பாதி நிகழ்ச்சியின் போதே கதிரையுடன் வெளியே வாசலுக்கு சென்றுவிட்டார். காவலர்கள் கேட்ட போது, “கதிரை 2 ரூபாய் என போடப்பட்டிருந்தது, நான் 2 ரூபாய் கொடுத்துவிட்டேன், இப்போது கதிரையை கொண்டு செல்கிறேன்…” என கூறினார். அதன் பின்னர் கலை நிகழ்ச்சி நிர்வாகிகள் தமது தவறை உணர்ந்து “கதிரைக்கு 2 ரூபாய் ” என மாற்றிக்கொண்டார்கள்.

சம்பவம் 3 :

ஒரு முறை ஏதோ மனக்குழப்பத்தில் வந்துகொண்டிருந்தபோது; அவரின் முன்னால், கிறிஸ்தவ சகோதரிகள் வந்திருக்கின்றனர். அவர்களைப்பார்த்து “தேவடியாட்கள் போகிறார்கள்” என்று சொல்லிவிட்டார்.
உடனே இந்த சம்பவம் நீதிமன்றத்துக்கு வந்தது.
நீதிபதி விசாரித்த போது, தான் தவறாக ஒன்றுமே சொல்லவில்லை. தேவனுக்கு அடியார்களாக இருப்பதால், தேவ அடியாட்கள் என்றே சொன்னன் என்று கூறி நுட்பமாக வழக்கை திசை திருப்பினார்.

சம்பவம் 4 :

ஒரு முறை தொடருந்து (புகையிரதம் / Train) கடவை அருகே சென்றுகொண்டுருந்த போது; அங்கே இருந்த பலகையில், “கோச்சி வரும் கவணம்” என எழுதப்பட்டிருந்தது. ( சிங்களத்தில் இரயிலை கோச்சி என்று சொல்வார்கள். ) உடனே, அதன் கீழ் “கொப்பரும் வருவார் கவணம்” என்று எழுதிவிட்டு சென்று விட்டார். அதை பார்வையிட்ட அதிகாரிகள் , அவர் மீது வழக்குத்தொடுத்துள்ளார்கள்.
நீதிபதி விசாரித்த போது,
கோச்சி என்றால் வளக்குத்தமிழில் “அம்மா” என்றும் அர்த்தமுள்ளது. அதனால்த்தான் கொப்பரும் வருவார் என்று எழுதினேன். பிழை எனதல்ல, தமிழை பயண்படுத்தாமல் தவறாக எழுதியதுதான் பிழை என சுட்டிகாட்டினார். இலங்கை பேச்சு வழக்கில் கோத்தை /கொம்மா= அம்மா, கொப்பர் = அப்பா )

சம்பவம் 5 :

யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள் ஓர் குளம். அதில் அழகிய மீன்கள் துள்ளி விளையாடும். இம்மீன்கள் அழிந்து போகாவண்ணம் பாதுகாக்கும் பொறுப்பு மாநகரசபைப் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அவர்கள் குளத்தின் அருகில் “இக்குளத்தில் உள்ள மீன்களை ஒருவராலும் பிடிக்க முடியாது” என்று பெரிய அட்டை ஒன்றில் எழுதி மாட்டிவிட்டார்கள்.

ஒருநாள் அவ்வழியே போய்க்கொண்டிருந்த கல்லடி வேலுப்பிள்ளை மரத்தில் என்ன அறிவித்தல் போடப்பட்டிருக்கின்றதென்பதை அறியும் ஆவலுடன் அருகில் சென்று வாசித்தார். வேதனையுடன் “நம் தமிழை நம்மவரே கொலை செய்கிறார்களே” இவர்களுக்கு நல்ல புத்தி புகட்டவேண்டும் என யோசித்தவர் வந்த தன் காரியத்தையும் மறந்தார்.

கடைக்குச் சென்று மீன் பிடிக்கும் தூண்டில் ஒன்றை வாங்கி வந்து குளத்திலுள்ள மீன்கள் சிலவற்றைப் பிடிக்கத் தொடங்கினார். விஷயம் அறிந்த காவலர்கள் ஓடோடி அவ்விடம் வந்தனர். ” ஏய்!, ஏய் ! நீ யார் படிக்காத முட்டாளா? மரத்தில் உள்ள அறிவித்தலைப் பார்க்கவில்லையா? மடத்தனமான வேலை செய்கிறாயே” என அதட்டினர்.
“அவ்வறிவித்தலைப் பார்த்தபடியால் தானே மீன்களைப் பிடிக்கின்றேன்; என்னால் முடியும்” எனச் சொல்லிவிட்டுக்கருமமே கண்ணாயினார்.

காவலர்களுக்கோ சினம் தலைக்கேறியது. தொடர்ந்து ஏசியதுடன் அவரைக் கைது செய்யவும் முயன்றனர். தான் கூறியதன் அர்த்தம் அவர்களின் மரமண்டைகளுக்குப் புரியவில்லை என்பதைப் புரிந்து கொண்டவர், அவர்கள் “மீன் பிடிக்க முடியாது என எழுதிப் போடப்பட்டிருப்பது தவறெனவும் “மீன் பிடிக்கக் கூடாது” என எழுதிப் போடும்படியும் விளக்கமாக எடுத்துக் கூறினார். காவலர்கள் தம் பிழையை உணர்ந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டதுடன் அவர் முன்னிலையிலேயே திருத்தமும் செய்தனர். தம் தொண்டைச் செவ்வனே செய்த திருப்தியுடன் கல்லடி வேலுப்பிள்ளை வீடு போய்ச் சேர்ந்தார்.

சம்பவம் 6 :

இவ்வாறு அடிக்கடி வழக்குக்களை திசை திருப்புவதால்; ஒரு முறை நீதிபதி, ” இனி இந்தப்பக்கம் உம்முடைய‌ தலை கறுப்பு தெரியக்கூடாது” என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.அடுத்த முறை நீதிமன்றம் சென்ற போது; தலையில் சிவப்பு மண் சட்டியை போட்டுகொண்டு போய், நீதிபதி விட்ட தமிழ் பிழையை சுட்டிக்காட்டினார்.

இவற்றை விடவும் பல சம்பவங்கள் இருக்கின்றன, பெரும்பாலான சம்பவங்கள் தமிழ் பிழைகளை சுட்டிக்காட்டுவனவாகவும், சைவ மதம் சார்ந்தவையாகவும் அமைந்தவை. இவரின் வரலாற்று நூலில் பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், இவரின் வாழ்க்கை வரலாற்றில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று, இலங்கையில் நான்காம் தர பாடப்புத்தகத்தில் “கொண்டாடினான் ஒடியற் கூழ்” எனும் தலைப்பில் இடம்பெற்றிந்தமை இவ் புலவரின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்ட மேலும் ஒரு சான்றாக உள்ளது. இன்றைய இலத்திரனியல் உலகிலும் அவரின் வரலாற்றுக்குறிப்புக்களை இணையத்தில் கண்டறியமுடிகின்றமை அவரின் நிலைப்பை சுட்டிக்காட்டுகிறது.

விரைவில் இவரின் நூலின் துணையுடன், ஈழத்தின் ஒவ்வொரு ஊருக்கான பெயர் பற்றிய விபரங்கள் பகிரப்படும்.

நன்றி :)

-Pirabu CHANDRAN

Ref :

Ceylon Vijayendran
kanaga_sritharan,
Web : madathuvaasal

 

(3200)

Leave a Reply

Top