எரிமலை, வெப்பம் பாதுகாப்பு நடவடிக்கைகள் : இயற்கைப் பேரழிவுகளும் பாதுகாப்பும்‏ 3

நில நடுக்கமும் பாதுகாப்பும்
சுனாமியும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பும்
எரிமலை, வெப்பம் பாதுகாப்பு நடவடிக்கைகள்
சூறாவளி, வரட்சி பாதுகாப்பு முறைகள்
பனிச்சரிவும் பாதுகாப்பு முறைகளும்

வெப்பமும் கடல் அரிப்பும்
பூமி வெப்பமடைவதால், கடல் மட்ட உயர்வுகளால் சில கடலோரப் பகுதிகள் உலக வரைபடத்தில் இருந்து காணாமல் போய்விடும் (மூழ்கும்) ஆபத்து இருக்கிறது. 8 நாடுகள் சார்ந்த ஆர்க்டிக் காலநிலை தாக்க மதிப்பீடு, என்ற அமைப்பின் தலைவரான ராபர்ட் கோரல், 2100 ஆம் ஆண்டில் உலகின் கடற்பரப்பு ஒரு மீட்டர் உயரும் என்றும், இதனால் வங்காள தேசம் முதல் புளோரிடா வரையிலான கடலோரப் பகுதிகளின் வீடுகள், கடலில் மூழ்க வாய்ப்பு உள்ளது என்றும், இதனால்; வங்காள தேசம் முதல் புளோரிடா வரையிலான கடலோரப் பகுதிகளின் வீடுகள், கடலில் மூழ்க வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரிக்கை செய்துள்ளது. புவி சூடாவதின் விளைவாக, அலாஸ்கா முதல் நார்வே வரையிலான கிரீன்லேண்ட் பனிப்பாளங்களும், ஆர்டிக் பனிப்பாறைகளும் முன்னர் கணக்கிடப்பட்டதை விட, விரைவிலேயே உருகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. சபை 2001 ஆம் ஆண்டு வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி 2100 ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் 20 முதல் 90 செ.மீ வரை உயரும், வங்காள தேசத்தில், சுமார் 17 மில்லியன் மக்கள் கடல் மட்டத்திலிருந்து வெறும் 1 மீட்டர் உயரம் உள்ள இடங்களில் வாழுகிறார்கள். இந்நிலையில், இவர்களின் நிலைமை என்னாகும்? எதிர்காலப் பேரிடர்கள் மிக பயங்கரமாய் உள்ளன. நாமும் நமது பாதுகாப்பைப் பற்றி அதிகம் அக்கறை கொள்ள வேண்டும்.

எரிமலை

எரிமலைகளின் நிலைகள்:

எரிமலைகளை, அவற்றின் செயல்படும் நிலையைப் பொறுத்து, கீழ்கண்ட மூன்று வகைகளாய் பிரிக்கலாம். ஆவை:

1. உறங்கு நிலைஎரிமலைகள்(Dormant volcano).
2. விழித்திருக்கும் செயல்படும் எரிமலைகள் (Active volcano).
3. செயலிழந்த அழிந்துபோன எரிமலைகள் (Extinct volcano).

1.உறங்கும் நிலையிலுள்ள எரிமலைகள், கொஞ்ச காலமாக, நெருப்பைக் கக்காமல் இருக்கும். பகலில் செயல்படும் மனிதன், இரவில் உறங்குவது போல, குறிப்பிட்ட காலம் வரை நெருப்பைக்க்காமல், வெடிக்காமல் இருக்கும். இத்தகைய எரிமலைகள், எதிர்பாராமல், எந்த நேரமும் வெடிக்கும். கோபக்காரன், கோபத்தை அடக்கி வைத்திருப்பது போன்ற நிலையிது.

2.செயல்படும் எரிமலைகள் என்பவை, அவ்வப்போது, குறிப்பிட்ட காலகட்டங்களில் என, லாவாவைக் கக்கிக் கொண்டிருப்பவை. தமது அக்கினிக் கோபத்தைக் காட்டி கொண்டிருப்பவை.

3.செயலிழந்த எரிமலைகள், ஆடி அடங்கியவை. இவை, மிகவும் முதுமையானவை எனலாம். இவை அடையாளத்துக்கு இருக்கும். இவற்றில் துடிப்பிருக்காது; இவற்றிலிருந்து கோபம் கொப்பளிக்காது. இந்த எரிமலைகள், அமைதியாகிப் போனவை; இயலாதவை. இவற்றை, ‘சமாதியாகிப் போனவை’ என்றும் சொல்லலாம். ஆனால், எத்தனை பேரை சமாதியாக்கின!

எரிமலை வெடித்தல்:

volcanic-tamilநமது காலடியின் கீழ், 30-200 கிலோ மீட்டர் ஆழத்தில், பாறைக் குழம்பு, நெருப்புப் பிழம்புபோல காற்றுகளுடன் கலந்த கலவையாக, சாதுவின் கோபம்போல அடைபட்டுக்கிடக்கின்றது. அத்தனை சாதுக்களும் முழுச் சாதுக்களாகவே இருப்பதில்லை. மிரண்டு எழும் சாதுக்களும் உண்டுதானே! அதுபோல், அடக்க முடியாத எரிமலைகளும் உண்டு. உலகின் மொத்த எரிமலைகளுள், ஏழத்தாழ 10 விழுக்காடு எரிமலைகள், தம்மை அடக்க முடிடியாதவை.

எரிமலை வெடிப்பின்போது, வேகமுடன் வெளிப்படும் லாவாவாலும், விண்ணுயரச் சென்று பின்னர் கீழ்வரும் புகையாலும், நச்சாலும், நச்சுக் காற்றாலும், உயிரினங்கள் அழிவுக்குள்ளாகும். இவ்வகையில் பல கிராமங்கள் காணாமற் போயிருக்கின்றன.

வெகு தொலைவிலிருந்து எரிமலை வெடிப்பதைப் பார்ப்பது, வாணவேடிக்கை பார்ப்பதைப் போன்றிருக்கலாம். ஆனால், அப்பகுதியின் அருகில் உள்ளோருக்கு அது நரகம். மிக அருகில் உள்ளவர்களுக்கோ அதுவே எமன். நெருப்புத் துண்டுகளும், நச்சுப்புகையும், அடர்ந்து வரும் படர்ந்து சாம்பலும், எண்ணற்ற எமன்களாக, எமன் கூட்டங்களாக ஒரே நேரத்தில் புறப்பட்டு வந்து அப்பகுதியின் மக்களின் உயிரை வங்கிவிடும்.

இதை எல்லாம் பார்க்கும்போது, நரகம் என்பது, எங்கோ இல்லை. இங்குதான் இருக்கின்றது. இதனால் பாதிப்புக்குள்ளானோரை நினைத்தால், நெஞ்சு நடுங்குகின்றது. பாவம்! மக்களுக்கும் இத்தனைச் சோதனைகளா?
எரிமலை மூலம் வெளிப்படும் குழம்புப் படிவுகளை எடுத்து ஆராய்ந்தபோது, அவற்றில் தங்கம், வெள்ளி, பித்தளை ஆகியவை இருந்தது அறியப்பட்டுள்ளது.

இது, என்ன உலமகடா? இங்கே இத்தனை இடர்களா? அதுவும் பேரிடர்களாகவா? இப்படியொரு மரணத்தை மக்கள் சந்திக்க வேண்டுமா? இவர்களின் மரணமத்துக்கு யார் காரணம்? தன் பிறப்புக்குத் தான் காரணமில்லாமல் இருக்கும் மக்கள், தம் மரணத்துக்கும் தாம் காரணமில்லாமலே மடிந்துபோவதை என்ன சொல்வது? இத்தகைய தீர்ப்பை, இயற்கை எழுதுவது ஏன்? அதன்மீது மக்களுக்கு பயம் இருக்க வேண்டும் என்றா? தவறாகத் தீர்ப்பு எழுதும் பேனா முனைகள் ஓடிந்தாலென்ன? இடர்களுக்குத் தொடர் இடர்கள் வந்தாலென்ன? மக்களின் அமைதிக்கு, வழி பிறந்தாலென்ன? இயற்கையே நீயும் செயற்கை ஆகாதே!

எரிமலையும் சுனாமியும்:

volcano-tamilஎரிமலைக்கு எல்லை கிடையாதா? கடலிலும் குமுறுகிறது; கண்டங்களிலும் கண்டபடி குமுறுகிறதே! நிலப்பரப்பில் எரிமலை வெடித்தாலும், இழப்பு அதுவே கடலில் என்றாலும் இழப்பை ஏற்படுத்துகின்றது. அந்த இழப்பு மட்டும் குறைவா? அது சுனாமியை உண்டாக்கி விடுவதால், கடலோரப் பகுதிகளில் ஏற்படும் இழப்பு, கணக்கற்றதாகிவிடுகிறது.

பசுபிக் பிளேட்டும் இந்தோ ஆஸ்திரேலியன் பிளேட்டும் சேரும் ஒரு பகுதியான கடலடியில், கரகாடோ (Krakatau) எரிமலை வெடித்தது. ‘வெடிக்கின்றேன் பார்’ என்று சொல்வதுபோல, அப்போது வெளிப்பட்ட அதன் சத்தம், 3540 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, ஆஸ்திரேலியாவுக்குக் கேட்டதாம். அப்போது, கடலின் மேல்மட்டத்தின் மேல், பெருங்கருஞ் சுவர்போல, இமய மலையின் உயரத்தைப்போல, மூன்று மடங்கு உயரத்தில் புகை மலை வெளிப்பட்டது. அந்தக் கரும்புகையால், அண்மைப் பகுதிகளில் பகலே இரவாய் மாறிற்று. எரிமலையிடம், சூரியன் தோற்றுப் போயிற்று.

இந்த எரிமலையால் ஏற்பட்ட சுனாமி அலையின் உயரம், ஜாவா, சுமத்திரா பகுதிக் கடற்கரையில் 12 மாடிகளின் உயரமாய் இருந்தது. இந்த அலையினால், துறைமுகங்களில் ஏறத்தாழ 5000 படகுகள் அமிழ்ந்து போயின். பேரான் (Baron) என்னும் கப்பல், கரைக்கு அப்பால், 2 மைல் தொலைவில் ஒரு வனப்பகுதியில் தூக்கி வீசப்பட்டது. பாதிப்புக்குள்ளான கடலோரப் பகுதிகளில், 36,000 மக்கள் மடிந்தனர். மொத்தம், 160 கடலோரக் கிராமங்கள் அழிந்து போயின.

எரிமலை ஏற்படுவதை முன்னறிய முடியுமா?

நில நடுக்கத்தைத்தான் ஏற்படுவதை முன்னறிய முடியாது. ஆனால், எரிமலை வெடிப்பதை முன்னறிய முடியும். எரிமலை ஏற்படப்போகும் பகுதியில்,

* நிலம், வீங்கியதுபோலத் தோன்றும்.
* நிலத்திலிருந்து, புகையுடன் காற்று வெளிப்படும்.
* சிறிய அளவில், நிலம் நடுங்கும்.
* நில வெப்பம் உயரும்
* புவி ஈர்ப்பு விசையில் மாற்றம் தோன்றும்.
* காந்த சக்திப் பரப்பில் மாற்றம் தெரியும்.
* வெளிப்படும் புகையில், சல்பரும் கார்பன் டையாக்சைடும் அதிகமிருக்கும்.

* எரிமலையின் தாக்கம் ஏற்படப்போவதை, தானியிங்கி முறையில் செயல்படும் உபகரணங்கள் மூலமாயும் அறியலாம். எனவே, எரிமலையை எதிர்கொள்ள முடியும்.

எரிமலையிலிருந்து தப்பிக்க:

எரிமலை குமுறப் போவதை அறிந்ததும், அல்லது அதற்கான அறிவிப்பைக் கேட்டதும், பாதுகாப்பான இடத்துக்குச் சென்றிட வேண்டும்.

எரிமலையின் கடுமையான வெப்பதாலும், நெருப்பாலும், சிதறும் நெருப்புத் துண்டுகளாலும், புகையாலும் பயங்கர ஆபத்து உண்டென்பதால், வெளியில் எங்கும் அலைந்து திரியாமல், தொலைவில் உள்ள வீடுகளினுள், ஜன்னல்களையும் மூடி இருப்பது பாதுகாப்பு.
எரிமலை வெடிப்பின்போது, மழையும் பெய்யுமானால், அமிலத் தாக்குதலாலும், சிமென்ட்பால் போன்ற எரிமலைச் சாம்பலின் தாக்குதலாலும் ஆபத்து உண்டாவதால், வெளியில் செல்லக் கூடாது.
by L.Guganathan.,Ph.D.,

Reference Book:
இயற்கைப் பேரழிவுகளும் பாதுகாப்பும்
முனைவர் வெ.சுந்தரராஜ், முனைவர் நம்மாழ்வார் , முதல் பதிப்பு
ஜூன் 2006, முதல் ஆசிரியர் ஏகம் பதிப்பகம், 3, பிள்ளையார் கோயில்தெரு,
2ஆம் சந்து, முதல்மாடி, திருவல்லிக்கேணி, சென்னை-5.

(948)

One thought on “எரிமலை, வெப்பம் பாதுகாப்பு நடவடிக்கைகள் : இயற்கைப் பேரழிவுகளும் பாதுகாப்பும்‏ 3”

  1. jakul says:

    Magic seivathu entha vahayaaana rahasiyam esp thodarbu, Petri aria virumpuhirean

Leave a Reply

Top