பிளேட்டோவின் தத்துவங்களில் சில

IMG_474830K

கனவு

நல்லவனோ கெட்டவனோ எந்த மனிதர்களின் அந்தரங்கத்
திலும் அடக்க முடியாத சில மிருகப் பிராந்தியமான இச்சைகள் இருக்கின்றன. அவை மனிதன் உறங்கும் போது கனவுகளாக வெளிப்படுகின்றன.

அன்றாட வாழ்க்கையைப் பரிசுத்தமாகவும், நிதானமாகவும் நடத்தி செல்பவன், உறங்கப் போவதற்குமுன் மிதமாக உணவருந்தித் தன் ம்னதிலுள்ள இச்சைகளையும், கோப தாபம் முதலான உணர்ச்சிகளையும் உதறித் தள்ளிவிட்டு, உறங்குவானாகில், அவன் கெட்ட கனவுகள் காண மாட்டான்.

(கனவுபற்றிய ஆய்வுகளும் கட்டுரைகளும் எழுதி தள்ளிய பேரறிஞர் ப்ராய்டிற்கு முன் 2300 வருசங்கள் முந்தியே மனதை பற்றிய சிந்தனைகளின் மூல வேர் பிளேட்டோவின் வார்த்தைகளில் இருப்பதை காணலாம்.)

பெண்களின் முன்னேற்றம் !

ஆண்களை போலவே பெண்களுக்கும் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும். அப்போதுதான் நாட்டின் தற்காப்பு நிலைத்திருக்கும், அதற்குமாறாக இப்போது இருப்பது போல் பெண்களுக்கு சம உரிமை வழங்காதிருந்தால், அந்த ராஜியத்தின் பாதிப் பகுதி ஊனமடைந்ததாக இருக்கும் – பிளேட்டோ

(இந்த முற்போக்கு கருத்து இன்னும் கூட உலகில் சரியாக வேர் விடவில்லை இல்லை இல்லை முளை விட வில்லை என்பதை கவனிக்க.)

செல்வம்

அளவுக்கு மீறிய செல்வமோ.. அளவு மீறிய வறுமையோ மனிதர்களை ஒழுக்கம் கெட்டவர்களாகவும் திறமை அற்றவர்களாகவும் செய்துவிடுகிறது.

ஒரு நாட்டில் பிச்சைக் காரர்கள் இருந்தால் அங்கே திருடர்களும் கோயிலில் கொள்ளையடிப்பவர்களும் இருப்பார்கள்.

கவிஞர்கள் எவ்வாறு தங்கள் சொந்த கவிதைகளின் மேல் மோகம் உள்ளவர்களாக இருக்கிறார்களோ, பெற்றோர்கள் எவ்வாறு தங்கள் குழந்தைகளிடம் பாசம் வைக்கிறார்களோ அப்படியே சுயமாக பணம் சம்பாதிப்பவர்களும் அந்த பணத்தின் மீது அதிக மோகம் (பாசம்) உள்ளவர்களாக இருப்பார்கள்.

பகுத்தறிவு

அறிவும் சத்தியமும் நெருங்கிய உறவு உடையன.

படிப்புகள் அனைத்திலும் அதி உன்னதமான படிப்பு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதை தேட வேண்டும் என்ற படிப்புதான்.

சமாதானத்திற்காக சண்டை பிறப்பிக்காமல் சண்டைக்காக சமாதானத்தைப் பிறப்பிக்கும் சட்ட சபையினன் புத்திசாலி அல்ல.

உண்மையான அறிவின் காதலனாய் இருந்தால் அவன் தன் இளமைப் பருவத்திலிருந்தே எல்லாவற்றிலும் மெய்மையை விரும்புபவனாய் இருக்க வேண்டும்.

மனிதனிடம் அறிவு உறங்கினால் மிருக இச்சைகள் கண் விழித்து எழுந்து குதியாட்டம் போடும்.

எவனொருவனுடைய ஆசைகள் ஒவ்வொரு வடிவத்திலுமுள்ள அறிவை நோக்கியே கவரப் படுகின்றனவோ, அவன் தன் மனதுக்கு ஏற்படக்கூடிய இன்பங்களிலே லயித்திருப்பானே தவிர உடலுக்கு ஏற்படக் கூடிய இன்பங்களை உணர மாட்டான்.

இளமை எனும் பக்குவமான வயதில் தான் எந்தவிதக் குணப் பண்பும் உருப்பெருகிறது; எந்த அபிப்ராயமும் ஆழமாகவே வேரூன்றுகிறது.

“ தெரிந்து கொள்ள ஒன்றுமில்லை ; நாம் அறியாத ததை அறிந்து கொள்ள அலைவதில் எந்த வித உபயோகமோ இல்லை என்று அசமந்தமாக மூழ்கி கிடப்பதை : இந்த கொள்கைக்கு எதிராக என் சக்தி எல்லாம் திரட்டி சொல்லாலும் செயலாலும் போரிடத் தயாராக இருக்கிறேன் ”

என் அறிவின் பிரதி பலிப்பில் எனக்கு சிறந்தது என தோன்றினாலும், அந்த அறிவின் படியே எப்போதும் வழி நடக்கும் சுபாவமுள்ளவர்களில் நானும் ஒருவன்.

நான் சொல்வதில் ஏதாவது உண்மைக்கு புறம்பாக இருந்தால் என் தவரை மற்றவர் திருத்திக் கொள்ள விரும்புகிறேன். அதே போல பிறர் சொல்வது உண்மைக்கு மாறாக இருந்தால் பிறர் அவற்றை திருத்த விரும்புகிறேன். ஏனெனில் இது தான் இரு சாரருக்கும் பெருத்த லாபம். பிறர் தீமைகளை நான் குணப் படுத்துவதை விட எனது பெருந்தீமையைப் பிறர் குணப் படுத்துவதில் லாபம் அதிகம் உண்டு.

ஒவ்வொரு மனிதனின் அறிவிலும் 4 நிலைகள்; முதல் நிலை யூகம், இரண்டாவது நம்பிக்கை, மூன்றாவது சிந்தனை தெளிவு, நான்காவது மெய்யான பகுத்தறிவு.

அறிவின் எதிரில் அறியாமை தலை வணங்குகிறது.

அறியாமையில் எல்லாம் பெரிய அறியாமை தெரியாதவன் தனக்கு அது தெரிந்து இருப்பதாக நினைத்துக் கொள்வது.

(5164)

Leave a Reply

Top