உயர் குருதி அமுக்கம் : காரணிகளும் கட்டுப்பாடுகளும் (Full Article)

உயர் குருதி அமுக்கம் (Hyper Tension/ High Blood Pressure – HBP) என்றால் என்ன?

உடலிலுள்ள நாடிகளில் (குருதிக்குழாய்) இருக்கும் குருதியினால் ஏற்படும் அமுக்கமே குருதியமுக்கமாகும். உங்களது குருதியமுக்கம் இரு பெறுமானங்களால் குறிப்பிடப்படும் உம். 120/80 mm Hg. முதலாவது எண் சுருக்கமுக்கம் ஆகும். இது இதயம் சுருங்கும் போது நாடிகளுள் காணப்படும் அமுக்கமாகும். இரண்டாவது எண் விரிவமுக்கமாகும். இது இதயம் விரியும் போது நாடிகளுள் காணப்படும் அமுக்கமாகும். குருதியமுக்கமானது தொடர்ந்து 140/90 mm Hg ஆக அல்லது அதற்குக் கூடுதலாகக் காணப்படுமாயின் அது ‘உயர் குருதியமுக்கம்’ என அழைக்கப்படும்.

இது இரண்டு வகைப்படும்.

தோற்றுவிக்கும் காரணிகள் :

 • அனேகமானோரின் காரணி கண்டறிய முடியாததாகவே காணப்படுகிறது. இது ‘அவசிய உயர் குருதியமுக்கம் (Essential Hypertension) என அழைக்கப்படுகின்றது. மிக அரிதான சந்தர்ப்பங்களில் உயர் குருதியமுக்கமானது வேறு நோய்களின் (உம். சிறுநீரக நோய், ஓமோன் சம்பந்தமான நோய்கள்) விளைவக ஏற்படுகிறது.
 • திருப்தியற்ற வேலை, குடும்ப சிக்கல், பொருளாதார சிக்கல் என்பவையும் உயர் குருதி அமுக்கம் ஏற்பட காரணமாக அமைகின்றது.
 • உடல் அசைவில்லாத வாழ்க்கைமுறை உயர் குருதி அமுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றது.
 • body mass index BMI ; 25க்கும் அதிகமாக இருப்பவர்களிடத்தில் 85 சதவிகிதத்தினருக்கும் மேற்பட்டோரிடத்தில் இது HBP தோன்றுகிறது.
 • பிறக்கும் போது குறைவான எடையுடன் பிறந்தோரிடத்தில் பிற்காலத்தில் HBP வருவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளதாக சமீபத்திய ஆயுகள் கூறுகின்றன.

அறிகுறிகள் :

தேவையற்ற கோபம், அடிக்கடி ஏற்படும் டென்ஷன், பதட்டம் என்பவை வெளித்தெரியும் காரணங்களாக கொள்ளமுடியும். ஆனால் அனேக சந்தர்பங்களில் அறிகுறிகள் வெளிப்படாமலும் இருக்கும்.

உயர் குருதியமுக்கம் கொண்டவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் :

 • புகைத்தல் முற்றாக நிறுத்தப் பட வேண்டும். சாதாரனமானவர்களில் கூட புகைத்தலின் பின்பு இதயத் துடிப்பு வீதம் அதிகரிக்கும் , குருதியமுக்கம் அதிகரிக்கும்.
 • உயர் குருதியமுக்கம் கொண்டவர்களிலே புகைத்தலும் சேரும் போது அவர்களுக்கு மாரடைப்பு, பாரிசவாதம் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் பல மடங்கு அதிகரிக்கின்றது.
 • அதிகம் உப்பு பாவிப்பதைத் தவிர்க்க வேண்டும்.உப்பினை அதிகம் கொண்ட பண்டங்களான மிக்சர் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
 • பொற்றாசியம் என்ற மூலகத்தை அதிகம் கொண்ட வாழைப்பழம், உருளைக் கிழங்கு, கொய்யா, யோக்கட் போன்றவரை உட்கொள்ள வேண்டும்.
 • பழங்கள் , மரக்கறி வகைகள், கடலை வகை, நார்ப்பதார்த்தமான உணவுகள், கொழுப்பு குறைந்த பால் வகைகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
 • மதுவின் அளவை குறைக்க வேண்டும்.
 • உடல் நிறையை கட்டுப் பாடாக வைக்க வேண்டும்.
 • தொடர்ச்சியான உடற்பயிர்ச்சியில் ஈடுபட வேண்டும்.

கர்ப்பகால உயர் குருதியமுக்கம் :

பொதுவாக கர்ப்பகால பிற்பகுதியில் (20 வாரங்களுக்கு பின்) முதல் பிரசவத்தின் போது கர்ப்பத்தின் முன் சாதாரண குருதியமுக்கமுள்ள தாய்க்கு இந்நிலைமை ஏற்படுகிறது. உடற்பகுதியில் வீக்கம் (முகம், விரல்கள்) சிறுநீருடன் புரதம் வெளியேறல் என்பன நோயறிகுறிகளாகும். அதீத நிலமைகளில் யோனி முக வீக்கம், வயிற்று வீக்கம் ஏற்படும்.

முதல் பிரசவம், நீரிழிவு, இரட்டைக்குழந்தை ( இதன் போது வாந்தி, குமட்டல், பசியின்மை அதிகமாக இருக்கும்) நிலைமைகள் கர்ப்பகால உயர் குருதியமுக்கத்திற்கு வழிவகுக்கலாம்.

கர்ப்பகால உயர் குருதியமுக்கமானது தாய் மற்றும் குழந்தைக்கு சிக்கல் நிலைமையை ஏற்படுத்தலாம். தாய்க்கு வலிப்பு நிலைமை மற்றும் ஏனைய உயர் குருதியமுக்க சிக்கல் விளைவுகளும் ஏற்படும். குழந்தைக்கு கருப்பையக குழந்தை வளர்ச்சிப் பாதிப்பு,கருப்பையக சிசு மரணம் போன்ற சிக்கல் நிலமைகள் ஏற்படலாம்.

குருதியமுக்கத்தின் பெறுமானத்திற்கேற்ப நோயின் தீவிரத் தன்மை மாறுபடலாம். இதனால் குருதியமுக்க பரிசோதனை ஒழுங்காகச் செய்து வைத்திய ஆலோசனை பெறுதல் சிறந்தது. தேவையேற்படின் வைத்தியரின் சிபார்சின் கீழ் மருந்து உட்கொள்ள வேண்டும்.

குழந்தையின் கருப்பையக வளர்ச்சியை ஒழுங்காக வைத்திய பரிசோதனையை தொடர்வதன் மூலம் கருப்பையக வளர்ச்சிக் குறைபாடு மற்றும் குழந்தையின் உயிர்ப்பான செயற்பாடுகளை கண்காணிக்கலாம்.

தீவிரமான கர்ப்பகால உயர் குருதியமுக்கத்தின் போது வலிப்பு நிலமை ஏற்படலாம். இது குழந்தையை கடுமையாக பாதிக்கும். இதனால் வைத்திய ஆலோசனையின் மூலம் உயர் குருதியமுக்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் அவசியமானது.

மருத்துவர்கள் / மருத்துவ மாணவர்கள் இந்த ஆக்கத்தில் இருக்கும் தவறுகளை திருத்தவும் மேலதிக தகவல்களை சேர்க்கவும் உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்…. 

References :
bloodpressureuk.org
Tamilmaruthuvam (blog)
nhlbi.nih.gov / meditamil
wiki

(2085)

One thought on “உயர் குருதி அமுக்கம் : காரணிகளும் கட்டுப்பாடுகளும் (Full Article)”

 1. அனைவருக்கும் பயனுள்ளவை …

Leave a Reply

Top