[Nazca Lines] அழியாத கோட்டுருவங்களும்…அழிந்துபோன நாஸ்க்கா இனமும்..[பகுதி 2]

நாஸ்க்கா கோடுகள்…      [ முதல் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும் ]

இன்றும் உயர் பாலைவனப்பகுதியாக இருக்கும் இந்த பகுதியில் நாஸ்க்கா இன மக்கள் உருவாக்கிவிட்டுப் போன பல உருவங்கள், வரைப்படங்கள் போன்ற கோடுகள் என 1500 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இரைந்து கிடக்கின்றன.

தரையில் இருந்து இவைகளைப் பார்த்தால் உருவங்கள் புலப்படுவதில்லை. ஒவ்வொரு படமும் 200 முதல் 500 அடி நீள அகலங்களில் விஸ்தாரமாக இருக்கின்றன.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோட்டுப்படங்கள், திமிங்கிலம், மீன், சுருள் வட்டங்கள், சிட்டுக் குருவி,கருடன், கடற்பாசி, சிலந்தி, குரங்கு, மரம், பூ, உடும்பு, ஓணான், கொக்கு, கைகள்,ஏலியன்ஸ் இப்படி இதன் உருவங்கள் நீள்கின்றன.

 

படங்கள் தவிரவும், விமான ஓடு பாதை போல பட்ட பட்டையான கோடுகளும் கிழக்கு மேற்க்காக, தென் வடலாகவும் வரையப்பட்டுள்ளன.

இவையெல்லாம் எப்படி வரையப்பட்டன ?
எதற்கு வரையப்பட்டன ?
இத்துணை காலம் எப்படி அழியாமல் இருந்தன ?
எப்போது அறியப்பட்டது ?
இப்படி பல கேள்விகள் பார்க்கும் அணைவருக்கும் மனதில் தோன்றும்.

தரையில் ஒரு சிறிய படம் சுலபமாக வரைந்துவிடலாம் ஆனால் அதையே சங்கர் படத்தில் வருவது போல பிரம்மாண்டமாக வரைய வேண்டுமானால்…சரி வரைந்த படத்தை சரிபார்ப்பது ? இதன் முழு பரிமாணத்தையும் வானத்தில் இருந்தே பார்க்க முடியும். ஆனால் இவை எல்லாம் எப்படி சாத்தியம் ?…ஆச்சர்யமாக இருக்கிறது.

இப்பகுதியின் நிலப்பரப்பு பழுப்பு சரளைக் கற்களால் நிரம்பியது…இக்கற்களை விலக்கினால் அதன் கீழ் பகுதியில் வெள்ளை நிற மணற்பகுதி.

 

கையில் ஒரு சிறிய ஸ்கெட்ஸ் வைத்துக்கொண்டு ஆங்காங்கே ஆப்பு வடிவ கற்களை நட்டு அவற்றிடையே கயிற்றைக்கட்டி வைத்து அல்லது கோடு போட்டுக்கொண்டு சரளைக்கற்கள் மண்களை சுவர் போல கரையாக கட்டி நடுவில் வண்டிப் பாதை போல உருவாக்கி இயற்கையான வெள்ளை திட்டு வரும் வரை சமன்படுத்தி இருக்கிறார்கள்.  இறுதியில் ஸ்கெட்சின் உருவம் பிரம்மாண்டமாக.

சுருள் வட்ட வடிவங்களும் துள்ளியமாக சரிவிகித ஆரங்களில் உள்ளன.

வானத்திலிருந்து பார்பதற்கு பழுப்பு கேன்வாசில் வரைந்த வெள்ளை ஓவியங்கள் போல இருக்கின்றன.

நாஸ்க்கா படங்கள் 1920 ல் பெருவில் விமான போக்குவரத்து துவங்கும் பொழுதே வெளி உலகிற்கு தெரிய வந்தன. அதற்கு முன் இல்லையா என்றால் ஆய்வு இருந்திருக்கிறது ஆனால் தெளிவாக விளங்கிக் கொள்ளப்படவில்லை.

இந்த உருவங்கள் கோடுகள் குறித்து பலவித கருத்துகள் ஆய்வாளர்களால் சொல்லப்படுகின்றன, அவைகள் ;

வேற்றுகிரக வாசிகள் தரையிறங்க அமைக்கப்பட்ட ஓடு பாதைகள்.  இதற்கு ஏலியன்ஸ் உருவம் மற்றும் குறுக்கும் நெடுக்குமான பாதைகள் புரியாத சின்ன உருவங்களை காட்டுகிறார்கள்.

பாதைகளாக தெரிவன பாசனக்கால் வாய்களாக இருந்திருக்கும்.

வானியல் குறியீடுகள் இவை என்கின்றனர் ஒருசாரர்.

கடவுள் உருவ வழிபாட்டு பகுதிகள். இயற்கை இவர்கள் கடவுள் எனவே அவற்றின் உருவங்கள்.

இந்த இனத்தின் பல பிரிவுகள் இருந்திருக்கலாம் ஒவ்வொரு பிரிவிற்கும்
ஒவ்வொரு உருவங்கள் அதன் மையம் அவர்கள் கூடி வழிபாடு சடங்குகள் அமைவிடங்களாக இருந்திருக்கலாம்.  பூசை, தலை வாங்கும் சடங்குகள்  பலியிடமும் அதுதான் என்கிறார்கள் ஆராய்சியாளர்கள். இதற்கு சான்றாக ஆங்காங்கே இருக்கும் மேடைத்திட்டுகள் மண்டைஓட்டு குவியல்கள் என்கிறார்கள்.

ஒவ்வொரு குலத்திற்கும் ஒவ்வொரு உருவ அடையாளம் அதனால் பல உருவங்கள்.

இவ்வளவு காலத்திற்கும் இவை எப்படி அழியாமல் இருந்தன?.  மழையற்ற பலைவனமான பகுதி என்பதால் இப்பகுதி குளிராலும் வெயிலாலும் கெட்டிப்பட்டிருக்கலாம். தடங்கள் மறையவில்லை.

நாஸ்க்கா இன மக்கள் இவ்வுலகத்திற்கு விட்டு சென்ற தடயங்கள் சொல்லும் பொதுவான கருத்து இதுவா ?

மரங்கள் இயற்கை அழிவே ஒரு இனம் அழிந்து போனதற்க்கான சாட்சி நாங்கள்… என்பதா?

[மரங்களை வெட்டி காடுகளை அழிப்பது. இயற்கை வளங்களை சுயநலத்திற்காக சுரண்டுவது. ஆறுகளை குப்பை மேடாக்குவது.
நம் நிலமும் இதுபோல நீரில்லாத பாலைகளாக மாறாமல் காக்கப்படவேண்டும்.   இக் கட்டுரை…ஒரு சிறு சிந்தனை துளி ]

 

பதிவாளர் : கலாகுமரன் : இனியவை கூறல்

(3422)

Leave a Reply

Top